புதுச்சேரி

புதுச்சேரி கிரிப்டோ மோசடி: குற்றவாளிகளின் ரூ.14 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!

புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ.14.16 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான அசோகன் (70) என்பவரிடம் கடந்த 2023-ல் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, ‘ஹாஷ்பே’ (hashpe.io) என்ற இணையதளம் மூலமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் தினமும் 1 சதவீத லாபம், 3 மடங்கு வரை வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி அவர் ரூ.98 லட்சம் முதலீடு செய்தார். அவரது கணக்கில் ரூ.2.50 கோடி லாபம் இருப்பதாகக் காட்டப்பட்ட நிலையில், அதனை பணமாக மாற்ற முயன்றபோது இணையதளம் முடக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த மேலும் 9 பேர் உள்பட நாடு முழுவதும் பொதுமக்களிடம் சுமார் ரூ.112.91 கோடி வரை இக்கும்பல் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதில் சுமார் ரூ.49.54 கோடி குற்றப்பணமாக அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கினை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியது. விசாரணையில் இம்ரான் பாஷா, ஹிதேஷ்குமார், சையத் உஸ்மான் (எ) பாபு, தாமோதரன் ஆகியோர் பாலிவுட் பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியும், சமூக வலைதள விளம்பரங்கள், சொகுசு கார்கள், வெளிநாட்டு சுற்றுலா போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளித்தும் பொதுமக்களை ஏமாற்றியது உறுதியானது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சென்னை, கோவை, கொல்கத்தா உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடத்தி மேற்கண்ட 4 பேரையும் அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து தமிழ்நாடு, ஹரியானா, புதுடெல்லியில் உள்ள அசையா சொத்துக்கள், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் வங்கிக் கணக்கு இருப்பு என மொத்தம் ரூ.14.16 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. மேலும் புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கும் தொடர்ந்துள்ள நிலையில், இதில் தொடர்புடைய மேலும் பலரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன