புதுச்சேரி வில்லியனூர் பீமாராவ் நகர் முகாம் மறுசீரமைப்பு கூட்டம்: புதிய முகாம் செயலாளராக சிலம்பரசன் தேர்வு!

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட பீமாராவ் நகரில் முகாம் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. வில்லியனூர் மாவட்ட செயலாளர் அ. தமிழரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைப்பின் கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்துவது மற்றும் மக்கள் பணிகளை முன்னெடுப்பது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் வ. ஆதவன், தலைமை நிலையச் செயலாளர் அ. எழில்மாறன், மாநிலச் செயலாளர் மா. ஆற்றலரசு ஆகியோர் முன்னிலை வகித்து கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். மேலும், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில பொருளாளர் கலைவண்ணன், சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தயாநிதி, முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தொல்காப்பியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.
கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, பீமாராவ் நகர் முகாம் முறையாக மறுசீரமைக்கப்பட்டு, அதன் புதிய முகாம் செயலாளராக சிலம்பரசன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம் செயலாளருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாநிலச் செயலாளர் முகமது கௌஸ், மாநிலத் துணைச் செயலாளர் பாத்திமா பி, மாவட்ட பொருளாளர் இரா. ஜான், மாவட்ட துணை செயலாளர்கள் அ. அருண், ஆனந்து, முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஹரிதாஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலாளர் சுகுந்தன் உள்ளிட்ட பல்வேறு அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
வில்லியனூர் பகுதியில் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க புதிய நிர்வாகிகள் தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும் எனவும், அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நிர்வாகியின் தேர்வு அப்பகுதி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.