13 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனே கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளைக் காரணம் காட்டி 13 புதிய மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும், ஆறுகளைப் பாலைவனமாக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க 13 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், குவாரிகளில் இருந்து யார்டுகளுக்கு மணலைக் கொண்டுவர 4 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதில் பெரும்பாலான குவாரிகள் காவிரி பாசன மாவட்டங்களில் அமையவுள்ளதாகவும், ஆன்லைன் வாயிலாக மணல் விற்பனையைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் நாள்தோறும் தேவைப்படும் மணலில் செயற்கை மணல் போக மீதமுள்ள தேவையை ஈடுகட்ட நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு குவாரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான யூனிட் மணல் அள்ளப்படும் நிலை உருவாகும் என்று சுட்டிக்காட்டினார். இவ்வாறு 13 குவாரிகளில் இருந்து ஓராண்டில் பல கோடி யூனிட் மணல் அள்ளப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட நதிகள் வெகுவிரைவில் வறண்டு, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் பேராபத்து ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு சட்டவிரோதமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டதை அமலாக்கத்துறை ஆய்வுகள் வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், செயற்கைக்கோள் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகளால் கூட மணல் கொள்ளையைத் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
எனவே, சுற்றுச்சூழலுக்கும் பாசன விவசாயத்திற்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் புதிய மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவைத் தமிழக அரசு முழுமையாகக் கைவிட வேண்டும். உள்நாட்டு நதிகளைப் பாழ்படுத்துவதற்குப் பதிலாக, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்யும் மாற்றுத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



