புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் கஞ்சாவுடன் நுழைந்த நபர் அதிரடி கைது!
புதுச்சேரி, அக். 07:
புதுச்சேரி – கடலூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலத்துடன் நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்துவதற்கு ஒரு நுழைவு வாயிலும், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் செல்வதற்கு 2-வது நுழைவு வாயிலும் பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் 2-வது நுழைவு வாயிலில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே உள்ளே அனுமதிப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை சுமார் 10 மணியளவில் அவ்வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற ஒரு நபரை பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது சட்டைப் பாக்கெட்டில் 8 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் புதுச்சேரி சங்கரன்பேட்டை காமன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகப்பெருமாள் (40) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் முறையான அனுமதியைப் பெற்று, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகப்பெருமாளை கைது செய்தனர். அவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் சிறைக் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய வந்தாரா அல்லது நீதிமன்ற வளாகத்தில் உள்ள வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English summary: Police on duty at the Puducherry integrated court complex stopped a 40-year-old man at the public entrance around 10 am and found an 8-gram cannabis packet in his shirt pocket. Uruliyanpettai police registered a case and arrested him, and are investigating whether he intended to supply prisoners brought to court or others at the premises.