புதுச்சேரி கடற்கரையில் மின்கம்பம் விழுந்து பலியான சிறுவன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் துருப்பிடித்த அலங்கார மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 7 வயது சிறுவனின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ந.ரங்கசாமி ரூ.5 லட்சத்திற்கான நிவாரண நிதியுதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பஜல் என்ற 7 வயது சிறுவன், நகரின் முதன்மை சுற்றுலா அடையாளமாகத் திகழும் கடற்கரைச் சாலைக்குச் சென்றிருந்தான். அப்போது அங்கு ஏற்கனவே தீவிரமாகத் துருப்பிடித்திருந்த அலங்கார மின்கம்பம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து அச்சிறுவன் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் பஜல் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்தத் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவருமான அன்பழகன், முதலமைச்சர் ந.ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, உயிரிழந்த சிறுவன் பஜலின் ஏழ்மையான குடும்பப் பின்னணியை எடுத்துரைத்த அவர், எதிர்காலத்தை இழந்து தவிக்கும் அக்குடும்பத்திற்கு அரசு சார்பில் போதிய இழப்பீடும் உடனடி நிவாரண நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திக் கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் ந.ரங்கசாமி, சிறுவனின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ரூ.5 லட்சத்திற்கான நிதியுதவிக்கான காசோலையினை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்நிகழ்வின்போது தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் மற்றும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
English summary: Chief Minister N. Rangasamy gave Rs 5 lakh in relief assistance, by cheque, to the family of a 7-year-old boy who died when a rusted decorative lamp post fell on Puducherry’s Beach Road. According to the report, temporary (pro-tem) Speaker and AIADMK state secretary Anbazhagan met the Chief Minister and urged compensation for the family, citing their poor background. The cheque was handed over at the Chief Minister’s office in the Assembly complex, with Anbazhagan and the boy’s family present.