ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பா? காவல்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ மறுப்பு!

ஈரோடு, 14/09/2026: ஈரோட்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக வெளியான தகவல்களுக்கு ஈரோடு மாவட்டக் காவல்துறை திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பத்திரிகை மறுப்புச் செய்திக் குறிப்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி ஈரோட்டில் ஊர்வலம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் தவறான செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 14-ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் ஈரோடு நகர காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலமாகச் சென்று மரியாதை செலுத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
அந்த மனுவினை பரிசீலித்த காவல்துறை, ஊர்வலத்திற்கு உரிய முறையில் அனுமதி வழங்கி அதற்கான செயல்முறை ஆணையையும் வழங்கிவிட்டது. எனவே, அனுமதி மறுக்கப்பட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்று ஈரோடு மாவட்டக் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.



