பொதுவெளியில் ஆடு, கோழி அறுத்தால் பறிமுதல் செய்யப்படும்: உழவர்கரை நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை!

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரங்களில் ஆடு, கோழிகளை அறுத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் எம்.எம்.வினயராஜ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் அதிகளவில் பெருகி விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் கூடுதலாக தற்காலிக இறைச்சிக் கடைகள் திறக்கப்படுகின்றன. இக்கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதோடு, சாலையோரங்களிலேயே ஆடு மற்றும் கோழிகளை பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் அறுக்கின்றனர். மேலும் அதன் கழிவுகளை சாலையோர வாய்க்கால்களில் கொட்டுவதால் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கி வருகிறது.
எனவே, தீபாவளி பண்டிகையையொட்டி நகராட்சிப் பகுதிகளில் இயங்கும் இறைச்சிக் கடைகளை தீவிரமாக ஆய்வு செய்ய நகராட்சி ஊழியர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும்போது, போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகள் மீதும், பொதுவெளியில் ஆடு, கோழிகளை அறுக்கும் வியாபாரிகள் மீதும் நகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும். அத்துடன் அத்தகைய இறைச்சிகள் மற்றும் பொருட்கள் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், இறைச்சிக் கழிவுகளை மழைநீர் வடிகால் மற்றும் சாலையோர வாய்க்கால்களில் கொட்டாமல், முறையாகச் சேகரித்து நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் மட்டுமே நேரடியாக ஒப்படைக்க வேண்டும். பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் இறைச்சியை வாங்க வேண்டாம் எனவும், இறைச்சி வாங்க வரும்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைத் தவிர்த்து, வீடுகளில் இருந்து துணிப்பைகள் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்து பயன்படுத்துமாறும் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
