புதுச்சேரி

புதுச்சேரி மின்சாரத் துறையில் 61 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வழங்கினர்!

புதுச்சேரி: புதுச்சேரி மின்சாரத் துறையில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 19 கட்டுமான உதவியாளர்கள் மற்றும் 42 வயர்மேன் உதவியாளர்கள் என மொத்தம் 61 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் ந. ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் வழங்கினர். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ந. ரங்கசாமி தலைமை வகித்தார்.

உள்துறை மற்றும் மின்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் முன்னிலை வகித்துப் பேசினார். மின்சாரத் துறையின் களப்பணிகளை விரைவுபடுத்தவும், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேரடி நியமனம் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 கட்டுமான உதவியாளர்களுக்கு (Construction Helper) பணிநியமன ஆணைகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மின்சாரத் துறையின் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் களப்பணியாற்ற உள்ள 42 வயர்மேன் உதவியாளர் (Helper to Wireman) பணியிடங்களுக்கான ஆணைகளையும் முதலமைச்சரும் மின்துறை அமைச்சரும் பயனாளிகளுக்கு நேரில் வழங்கி, பணியில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதுச்சேரி அரசு இளைஞர்களுக்குத் தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்கும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. மின்துறையில் ஏற்பட்டுள்ள இந்த புதிய நியமனங்கள் மூலம் மின் கட்டமைப்பு பராமரிப்புப் பணிகள், புதிய மின் இணைப்புகள் வழங்கும் நடைமுறைகள் மற்றும் புகார்களுக்குத் தீர்வு காணும் பணிகள் இனி கூடுதல் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிநியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள் முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மின்சாரத் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன