புதுச்சேரி

ஏனாம் புயல் நிவாரணத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துக: வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ. 6:

ஏனாம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித இடைத்தரகர்களும் இன்றி, நிவாரணத் தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான வி.வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில், “புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏனாம் பிராந்தியத்திற்கு துணைநிலை ஆளுநரோ அல்லது முதலமைச்சரோ நேரில் சென்று பார்வையிடவில்லை. அங்குள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மட்டுமே ஆய்வு செய்கிறார். அவர் தனக்கு விருப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்குவார் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இடைத்தரகர்கள் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கிலேயே நிவாரணம் நேரடியாகச் செலுத்தப்பட வேண்டும்” என்றார்.

மேலும் புதுச்சேரி சுகாதாரக் கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், “சமூகப் பங்களிப்பு நிதி (CSR) மூலம் ரூ.70 லட்சம் மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் மற்றும் 57 அவசர சிகிச்சைப் படுக்கைகள் புதுவை அரசு மருத்துவமனைக்கு இன்னும் பத்து நாள்களில் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 ஆம்புலன்ஸ்கள் வரவுள்ளன. அதேவேளையில், போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம்” என எச்சரித்தார்.

அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ரூ.8.50 கோடி நிதி மோசடி, நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிசைப் பகுதிகளில் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி இளையராஜா உடனிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன