புதுச்சேரியில் சீரழிந்த சாலைகளை உயர்தரத்துடன் மீண்டும் அமைக்க வேண்டும்: அரசுக்கு நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!
புதுச்சேரி, நவ. 6:
புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்துள்ள அனைத்துச் சாலைகளையும் உயர்தரத்துடன் மீண்டும் புதிதாக சீரமைக்க வேண்டும் என்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு (குப்புசாமி) துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமர்ப்பித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுவை நகரப் பகுதியான புல்வார்டு எல்லைக்குட்பட்ட அண்ணா சாலை, எஸ்.வி. பட்டேல் சாலை, கடற்கரை சாலை, புஸ்ஸி வீதி உள்ளிட்ட உட்புறப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை மூலம் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் தரமான சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. முன்னதாக இச்சாலைகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீதிகளில் வழிந்தோடியது. எனவே முதலில் பாதாள சாக்கடை மறுசீரமைப்பு பணிகளை முடித்துவிட்டு சாலை அமைக்க வேண்டும் என நேரில் வலியுறுத்தியும், துறை அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தி சாலைப் பணிகளை முடித்தனர்.
ஆனால், சாலை பணிகள் முடிந்து இரண்டே மாதங்களில் மீண்டும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக டெண்டர் விடப்பட்டு, புதிய சிமெண்ட் சாலைகள் அனைத்தும் உடைக்கப்பட்டன. சரியான திட்டமிடல் இன்றியும், மின்துறை மற்றும் குடிநீர் விநியோகப் பிரிவினருடன் முறையான ஒருங்கிணைப்பு இன்றியும் இத்தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பூமிக்கடியில் செல்லும் மின் கேபிள்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து மின்வெட்டும், குடிநீர் தட்டுப்பாடும் தொடர்கதையாகி வருகிறது.
மேலும் ரங்கப்பிள்ளை வீதி, வெள்ளாழர் வீதி, நீடராஜப்பையர் வீதி, தம்பு நாயக்கர் வீதி, லூயி பிரகாசம் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் குடியிருப்புகளுக்கு முறையான கழிவுநீர் இணைப்பு வழங்கப்படாததால் கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மீண்டும் கழிவுநீர் இணைப்புக்காக சாலைகளும் நடைபாதைகளும் தோண்டப்பட்டு மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகள் மிக மோசமாக உருக்குலைந்துள்ளன. எனவே ஆளுநரும் முதலமைச்சரும் உடனடியாக இதில் தலையிட்டு, மக்கள் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் உரிய தரத்துடன் மறுசீரமைக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
