புதுச்சேரி சாலைகளில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் அதிரடி சோதனை: சீனியர் எஸ்.பி. தீபிகா தகவல்
புதுச்சேரி, நவ. 6:
புதுச்சேரி மாநில சாலைகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் தீவிர வாகன சோதனை மற்றும் இரவு நேர ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சீனியர் எஸ்.பி. தீபிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: புதுவை காவல்துறை டி.ஜி.பி. உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கிருமாம்பாக்கம் காவல் நிலையம் இணைந்து சிறப்பு கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கிருமாம்பாக்கம் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி ஷண்முகசத்தியா தலைமையிலான போலீசார், அரியாங்குப்பம் முதல் பாகூர் முள்ளோடை வரையிலான ஆள் நடமாட்டம் குறைந்த சாலைகள் மற்றும் பரிக்கல்பட்டு ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக, போதிய வெளிச்சமில்லாத இருள் சூழ்ந்த இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அவ்வழியே சென்ற வாகனங்கள் மற்றும் நபர்களின் அடையாள அட்டைகள் முழுமையாக சரிபார்க்கப்பட்டன. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் புழக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இதுபோன்ற திடீர் வாகன சோதனைகளும், இரவு நேர ரோந்து பணிகளும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
