தமிழ்நாடு

தக்கலை அருகே மாயமான கல்லூரி மாணவி: காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை அருகே கல்லூரிக்குச் சென்று மாயமானதாகப் புகாரளிக்கப்பட்ட மாணவி, தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான் (55). உணவகத் தொழிலாளியான இவருடைய மகள் ஹசீபா (20). இவர் மலங்கரையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் காலையில் கல்லூரிக்குச் சென்ற மாணவி ஹசீபா, மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அவரது செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் மாணவி குறித்து எந்தவிதத் தகவலும் கிடைக்காததால், மனமுடைந்த தந்தை ஷாஜகான் உடனடியாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான கல்லூரி மாணவியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், மாயமான ஹசீபா தனது காதலனான மருந்து விற்பனை பிரதிநிதி அபின் என்பவருடன் தக்கலை காவல் நிலையத்தில் திடீரென நேரில் ஆஜராகி தஞ்சம் அடைந்தார். அப்போது, தாங்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் மாணவி போலீசாரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் நேரில் வரவழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தரப்பில் இந்தத் திருமணத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், காதல் ஜோடிகள் இருவரும் சட்டப்பூர்வ திருமண வயதை எட்டியவர்கள் என்பதால், மாணவி ஹசீபாவின் சொந்த விருப்பத்தின் பேரில் அவரை காதலனுடன் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன