தமிழ்நாடு

சென்னையில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தயாநிதி மாறன், சேகர்பாபு தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம்!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை வளாகத்தில், சென்னை மாவட்டத்திற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) ஆய்வுக் கூட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்தாலோசித்தனர்.

இக்கூட்டத்தில் இக்குழுவின் துணைத் தலைவரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன், ஆர்.கிரிராஜன், பிரவீன் சக்கரவர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவருமான நே.சிற்றரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.பல்லவி ஆகியோர் உடனிருந்து ஆலோசனைகளை வழங்கினர்.

அரசு நிர்வாகத் தரப்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.கீதா பிரியா மற்றும் குழு உறுப்பினர்கள் நிவேதா ஜெசிக்கா, மருத்துவர் யாழினி பி.எம். உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னையில் பொதுமக்களுக்குத் தடையின்றி சென்றடைய வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்வி, குடிநீர் வழங்கல், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துப் பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரமாகவும் விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்குக் கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன