அண்ணா அறிவாலயத்தில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை: தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் குறித்து டி.ஆர்.பி. ராஜா விளக்கம்!

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் பணிகளில் தலைமை தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கழக மறுசீரமைப்புக் குழுவுடன் தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக மூத்த நிர்வாகியுமான திரு. தங்கம் தென்னரசு தலைமையில் அமைக்கப்பட்ட இந்த மறுசீரமைப்புக் குழு, கட்சியின் பல்வேறு அணிகளின் செயல்பாடுகள் மற்றும் கள நிலவரங்களை கேட்டறிந்து வருகிறது.
இக்கூட்டத்தில் மறுசீரமைப்புக் குழுவின் சார்பில் திரு. சக்கரபாணி எம்.எல்.ஏ., திருமதி தமிழரசி ரவிக்குமார், முரசொலி எம்.பி., திரு. எஸ்.கே.பி. கருணா மற்றும் திரு. இ. பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணியின் களப்பணிகள், சமூக ஊடகங்களில் கட்சியின் கொள்கைப் பிரச்சாரம் மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக நிர்வாகிகள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும் தமிழக அமைச்சருமான முனைவர் டி.ஆர்.பி. ராஜா கலந்துகொண்டு, விரிவான பவர்பாயிண்ட் விளக்கக் காட்சி (PPT Presentation) மூலமாக அணியின் தற்போதைய செயல்பாடுகளை எடுத்துரைத்தார். குறிப்பாக சமூக வலைதளங்களில் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள நிர்வாகச் சிக்கல்கள், தற்கால அரசியல் சவால்கள் மற்றும் களப்பணியில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், வரவிருக்கும் அரசியல் களங்களை எதிர்கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை அடித்தட்டு வரை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும், புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்சியை நவீனமயமாக்குவது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் ஐடி அணியின் மாநிலச் செயலாளர், இணைச் செயலாளர்கள், ஆலோசகர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
