கோட்டகுப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலக அறிவுத் திருவிழா: அமைச்சர் பெ.இராஜவேலு பங்கேற்று விருதுகள் வழங்கினார்!

புதுச்சேரி: கோட்டகுப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தின் 3-ஆம் நாள் அறிவுத் திருவிழா, புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.இராஜவேலு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி நிறைவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.இராஜவேலு பேசுகையில், “தனி ஒரு மனிதனின் மனதில் உதித்த உயரிய சிந்தனை, நூலகமாக உருப்பெற்று தொடர்ந்து 100 ஆண்டுகள் தடம்பதித்து நூற்றாண்டு விழா காண்பது வரலாற்று சிறப்புமிக்கது. இத்தகைய மகத்தான நிகழ்வில் பங்கெடுத்து பாராட்டுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமும் பெருமையுமாகும். இளைய தலைமுறையினர் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு சமூக முன்னேற்றத்திற்கு வித்திட வேண்டும்” என்று வாழ்த்திப் பேசினார்.
விழாவில் நூலகத்தின் நூற்றாண்டு சாதனைகள், சமூகத்திற்கு ஆற்றிய கல்வி மற்றும் அறிவுப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையிலான பல்வேறு இலக்கிய, அறிவுசார் நிகழ்வுகள் இந்த மூன்று நாள் திருவிழாவில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.
முன்னதாக, இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஆசி வழங்கிய புதுச்சேரி முதலமைச்சருக்கும், மணிமண்டபத்தில் இடம் ஒதுக்கித் தந்து முழு ஒத்துழைப்பு நல்கிய கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.இராஜவேலு அவர்களுக்கும் அமைப்பாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும் உறுதுணையாக நின்ற கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநர், கண்காணிப்பாளர்கள் மற்றும் காமராஜர் மணிமண்டப ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், நூலகங்களை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கும் வகையிலும் இதுபோன்ற அறிவுத் திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெருமிதம் தெரிவித்தனர்.

