திருப்பூரில் 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது: சோமனூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்!

திருப்பூர்: திருப்பூர் – சோமனூர் சாலையில் பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த புதிய ரயில்வே மேம்பாலம் இன்று முறைப்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண் ராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். மேலும், பூலுவபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடமும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இதே நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சோமனூர் வழியாகச் செல்லும் முக்கிய வழித்தடத்தில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் தினசரி பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை நீடித்து வந்தது. தற்போது இந்த நவீன ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயண நேரம் வெகுவாகக் குறைவதோடு, விபத்துகளும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சத்தியபாமா, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணவரே இ.ஆ.ப., பொறுப்பு மேயர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். புதிய பாலத்தின் வருகையால் அப்பகுதியின் தொழில் மற்றும் வர்த்தகப் போக்குவரத்து மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
