புதுச்சேரி

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் குளம் வெட்ட முடிவு: 60 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ. தீவிரம்!

புதுச்சேரி, அக். 27:
புதுச்சேரி அருகே வில்லியனூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலுக்குப் புதிய குளம் வெட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொகுதி மக்களின் சுமார் 60 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எடுத்த முன்னெடுப்புகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எனத் தனியாகக் கோவில் குளம் இல்லாததால், அப்பகுதி பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருக்குளம் அமைத்துத் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில், கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், கோவில் அருகில் பயன்பாடின்றி உள்ள சுமார் 21 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் புதிய குளம் வெட்டுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் அங்கு நடைபாதை, திருமண மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இடவசதி மற்றும் நவீனக் கழிப்பறை வசதிகளைச் சமூகப் பங்களிப்பு நிதி (CSR) மூலம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.வின் இந்த ஆக்கப்பூர்வமான திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரும் ஒருங்கிணைந்து கோவில் குளத்தை அமைப்போம் என்று ஊர் பொதுமக்கள் உறுதியளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன