சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கணக்கில் ரூ.13.97 கோடி மோசடி: நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

புதுடெல்லி:
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ரிசர்வ் வங்கி தீர்வுக் கணக்கிலிருந்து ரூ.13.97 கோடி நிதி முறைகேடாகக் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை கோரி மத்திய நிதியமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவசர கடிதம் எழுதியுள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பராமரித்து வரும் தனது தீர்வுக் கணக்கிலிருந்து 187 அனுமதியற்ற பரிவர்த்தனைகள் மூலம் சுமார் ரூ.13.97 கோடி பணம் 36 வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 15 முதல் 17-ஆம் தேதி வரையிலான மூன்று தினங்களில் இந்த முறைகேடு அரங்கேறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான ‘இஃப்டாஸ்’ (IFTAS) இயக்கும் நிதிச் செய்திப் பரிமாற்றக் கட்டமைப்பில் (SFMS) ஊடுருவி இச்செயல் செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மும்பை சைபர் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வங்கியின் வழக்கமான மைய வங்கிச் செயல்பாட்டு முறைமை (CBS) மற்றும் RTGS பதிவுகளில் பரிவர்த்தனைகளுக்கான தடயங்கள் கிடைக்காதது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதே காலகட்டத்தில் வங்கியின் RTGS அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பாதுகாப்புச் சுவர்கள் (Firewalls) பலவீனமாக இருந்ததா அல்லது வங்கி உள்நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற 8 முக்கிய கேள்விகளை சு.வெங்கடேசன் எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடாவில் தரவு கசிவு புகார்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்ற நிலைக்குழுவின் மேற்பார்வையில் அவசர தடயவியல் தொழில்நுட்பத் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், வங்கிகளின் பணிகளை வெளிநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் கொள்கையை (Outsourcing Policy) மறுபரிசீலனை செய்து மக்களின் சேமிப்பைப் பாதுகாக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

