நடுவானில் ஆபத்து: 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!

அபுதாபி: துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் பறந்த பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தீவிர அவசர நிலையின் போது, சாதுரியமாகச் செயல்பட்டு 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமான ஊழியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 அன்று, துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ‘ஃப்ளைதுபாய்’ (flydubai) நிறுவனத்திற்குச் சொந்தமான FZ1073 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானிகள் அறையில் (Cockpit) எதிர்பாராத விதமாக மிகத் தீவிரமான அசம்பாவிதம் ஏற்பட்டது. இந்த இக்கட்டான தருணத்தில், தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் எதிர்பாராத காயங்களுக்கு ஆளானார். எனினும், தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் மன உறுதியுடன் விமானத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.
விமானத்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக விமானப் பாதையை மாற்றிய அவர், சவூதி அரேபியாவில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார். அவரது துரித முடிவாலும், விமானக் குழுவினரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினாலும், விமானத்தில் பயணித்த 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாகத் தப்பினர்.
இந்திய விமானியின் இந்த இணையற்ற துணிச்சலையும் கடமை உணர்வையும் அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான், கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமானக் குழுவினருக்கு அந்நாட்டின் உயரிய கௌரவமான ‘முதல் வகுப்பு சையத் II விருதை’ (First-Class Order of Zayed II) வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து வரலாற்றில், இக்கட்டான நெருக்கடி நேரத்திலும் தொழில்முறை ஒழுக்கத்துடனும் அசாத்திய துணிச்சலுடனும் செயல்பட்டுப் பல உயிர்களைக் காத்த இந்திய விமானியின் இந்த சாதனை உலகம் முழுவதிலும் உள்ள விமானப் போக்குவரத்துத் துறையினரால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

