தமிழிசை ஆய்வறிஞர் அரிமளம் பத்மநாபனின் பவளவிழா: புதுச்சேரியில் 5 நூல்கள் வெளியீடு!

புதுச்சேரி: தமிழிசை ஆய்வறிஞரும் பேராசிரியருமான முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் 75-ஆவது பிறந்தநாள் பவளவிழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் அவரது ஐந்து புதிய நூல்கள் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி ஜெயராம் உணவக வளாக அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு புதுச்சேரி முன்னாள் அமைச்சர் க. லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி விழாவினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, தமிழிசை ஆய்வறிஞர் அரிமளம் பத்மநாபன் எழுதிய “மகாகவி பாரதியும் நாட்டுப்புற இசையும்” என்ற நூலினை ஆரோவில் கவிஞர் இரா. மீனாட்சி வெளியிட, அதை பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, இந்நூல் குறித்து முனைவர் நா. இளங்கோ விரிவான அறிமுகவுரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அறிஞர்கள், பாரதியாரின் கவிதைகளுக்கும் தமிழ் மண்ணின் நாட்டுப்புற இசை மரபுகளுக்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பை இந்நூல் மிக நுட்பமாக வெளிக்கொணர்ந்துள்ளதாகப் பாராட்டினர். தமிழிசை மரபையும், நாட்டுப்புற இசை வடிவங்களையும் ஆவணப்படுத்துவதில் அரிமளம் பத்மநாபன் ஆற்றி வரும் ஆய்வுப் பணிகள் போற்றத்தக்கவை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
75 வயதை நிறைவு செய்து பவளவிழா காணும் தமிழிசை ஆய்வறிஞர் அரிமளம் பத்மநாபனின் இலக்கிய மற்றும் இசைப் பணிகளைப் பாராட்டி, விழாவில் பங்கேற்ற பேராசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் அவருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

