புதுச்சேரி

போதுமான அளவு பால் வழங்கக் கோரி ஏஐடியுசி பான்லே விற்பனை முகவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, அக்டோபர் 31: பான்லே பால் கூட்டுறவு ஒன்றியத்தில் தங்களுக்குத் தேவையான அளவு பால் வழங்கக் கோரி ஏஐடியுசி பான்லே பால் விற்பனை முகவர்கள் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பான்லே விற்பனை பிரிவு அலுவலக வாசலில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பான்லே பால் கூட்டுறவு ஒன்றியத்தில் 220-க்கும் மேற்பட்ட முகவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெயில், புயல் போன்ற பல்வேறு காலநிலைகளிலும் விடுமுறை இன்றி தினம் இரு வேளையும் பான்லே பாலை புதுச்சேரி முழுவதும் கொண்டு சேர்க்கும் பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பான்லே நிர்வாகம் முகவர்களுக்கு எப்பொழுதும் வழங்கும் அளவைக் காட்டிலும் குறைவான பாலினை விற்பனைக்கு அனுப்புவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு முழுமையாக பால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முகவர்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே பால் விற்பனை குறைந்துள்ள நிலையில் இத்தகைய செயலால் தனியார் பால் நிறுவனங்கள் எளிதில் புகுந்துவிடும் என்றும், பண்டிகை நேரத்தில் முன் அறிவிப்பின்றி பால் அளவை குறைப்பது விற்பனையில் சரிவை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஏஐடியுசி சார்பில் பான்லே நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபொழுது பால் வழங்குவது எப்போது சீராகும் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இதனைத் தொடர்ந்து முகவர்களுக்குக் கேட்கும் அளவிற்குப் பான்லே பால் வழங்க வேண்டும் என்றும், ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பால் வழங்குவதை நிறுத்திவிட்டு முகவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் அந்தோனி, முகவர் சங்க கவுரவ தலைவர்கள் ராஜன், செண்பகவல்லி, விமலா, பொருளாளர் சிவா, துணைத் தலைவர்கள் அன்சாரி, மணிகண்டன், துணைச் செயலாளர்கள் விஜயசந்திரன், ராம்குமார் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

English summary: AITUC Pondicherry cooperative milk (Panlay) sales agents held a protest at the Panlay sales office on Mission Street, Puducherry, demanding adequate milk supply. The agents, more than 220 of whom have sold milk for over 30 years, alleged that the Panlay management is sending them less milk than usual, including during the festival season. They also demanded that milk supply to Swiggy, Zomato and other companies be stopped and agents be given priority. The report says the management did not say when supply would normalise.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன