புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: 4 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – கலெக்டர் உத்தரவு
புதுச்சேரி, நவ. 1:
புதுச்சேரியில் தொடர் குற்றச் செயல்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி ரெயின்போ நகரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி (25), தேவா (25), ஆதி (24) ஆகிய 3 பேர் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய ரோடியர்பேட்டை முருகசாமி நகரைச் சேர்ந்த சக்திவேல் (22), ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் விஷ்ணு (22), சாரதி என்ற தமிழரசன் (23) மற்றும் மதியரசன் என்ற காளியப்பன் (24) ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி உப்பனாறு வாய்க்கால் பாலம் அருகே, ஆள்மாறாட்டம் காரணமாக கோவிந்தசாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் (31) என்பவரை இந்த 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இவ்வழக்கில் உருளையன்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட நால்வரும் காலாப்பட்டு மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்தார். இதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், 4 ரவுடிகளையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அடுத்த ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
