வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவு, அடைப்புகளை உடனே அகற்றுக: அதிகாரிகளுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வரும் சூழலில், மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் வாய்க்கால்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அடைப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் அதிரடி களஆய்வு மேற்கொண்டார். முதலில் ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணாவுடன் இணைந்து தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய குடியிருப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையரிடம் பேசிய கலெக்டர், தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், செடி கொடிகள் மற்றும் அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் உடனுக்குடன் தூர்வாரி அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் குப்பைகளை வாய்க்கால்களில் கொட்டாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மட்டுமே கொட்டுவதை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளவாரி வாய்க்காலை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மழைநீரானது குடியிருப்புகளை பாதிக்காமல் தங்குதடையின்றி கடலுக்குச் செல்கிறதா என்பதை ஆய்வு செய்தார். பின்னர் காலாப்பட்டு கடற்கரை பகுதிக்குச் சென்று, கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் கருங்கற்கள் கொட்டி கரையைப் பலப்படுத்தும் பணிகளைத் தீவிரமாகப் பார்வையிட்டார். குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகாதபடி தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், நகராட்சி ஆணையர் அருளப்பாவு மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
English summary: With the northeast monsoon intensifying in Puducherry, District Collector A. Kulothungan ordered officials to quickly clear plastic waste and blockages from drains so that rainwater can flow out. He inspected low-lying areas in the Raj Bhavan constituency with MLA Vignesh Kannan, viewed the Vellavari canal, and checked the rock-laying work against sea erosion at Kalapet beach, directing that the protective wall be completed quickly.
