புதுவை விடுதலை நாளில் முதல்வர் ரங்கசாமி அதிரடி: விரைவில் இலவச மனைப்பட்டா; 2,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்!
புதுச்சேரி, நவ. 1:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் என். ரங்கசாமி, ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குதல், அரசுப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விவரங்களையும் விரிவாகப் பட்டியலிட்டார்.
அரசு ஊழியர்கள் நியமனம் மற்றும் ஏழைகளுக்கான நிலம் குறித்து முதலமைச்சர் பேசுகையில், “அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் நேரடி நியமனம் மூலம் சுமார் 5,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 2,000 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். அதேபோல், நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் வகையில் அரியூர், இருளன்சந்தை உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன; விரைவில் தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.12 சதவீதமாகவும், தனிநபர் வருமானம் 6.5 சதவீத வளர்ச்சியுடன் ரூ.3,44,926 ஆகவும் உயர்ந்துள்ளது என்றார். மேலும், சொந்த வரி வருவாய் ரூ.7,632 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளதாகவும், மூலதனச் செலவினங்கள் 71.09 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை விளக்கிய முதல்வர், மத்திய அரசின் ‘ஒரு மாநிலம் ஒரு உலகளாவிய சுற்றுலாத் தலம்’ திட்டத்தில் புதுச்சேரியை இணைக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் ரூ.4,750 கோடியில் நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம், உலக வங்கி நிதியில் ரூ.1,433 கோடியில் கடற்கரை பாதுகாப்புத் திட்டம், நரம்பையில் ரூ.500 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன என்றார்.
கரசூரில் ரூ.2,500 கோடி முதலீட்டிலும், தட்டாஞ்சாவடியில் ரூ.725 கோடியிலும் அமையவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் சுமார் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
English summary: In his Liberation Day speech, Puducherry Chief Minister N. Rangasamy said a notification to fill 2,000 more government posts would be issued soon, after about 5,000 posts were filled by direct recruitment in the last five years. He said land acquisition for free house-site pattas at Ariyur and Irulansandai is complete and pattas will be given soon. He cited a growth rate of 8.12 percent, per capita income of Rs 3,44,926 and own tax revenue of Rs 7,632 crore, and said special economic zones at Karasur and Thattanchavady would create about 50,000 jobs.
