புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட ரூ.50,000 செல்போன், ரொக்கம்: உடனடியாக மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு!
புதுச்சேரி:
புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகேயுள்ள கடற்கரை பகுதியில் பெங்களூரு சுற்றுலாப் பயணிகள் தவறவிட்ட ரூ.50,000 மதிப்பிலான நவீன செல்போன், ரொக்கப் பணம் மற்றும் ரயில் பயணச்சீட்டுகள் உள்ளிட்ட உடைமைகளை பத்திரமாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த கடலோரக் காவல் படை உதவி ஆய்வாளர் மற்றும் உயிர்காக்கும் காவலருக்கு (Life Guard) பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்த பயணிகள் குழுவினர், தலைமைச் செயலகத்தின் எதிரே அமைந்துள்ள கடற்கரை பகுதியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் தங்களது உடமைகளை அப்பகுதியில் தவறவிட்டனர். அதில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நவீன செல்போன், ரூ.5,000 ரொக்கப் பணம் மற்றும் ஊருக்குத் திரும்புவதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த ரயில் பயணச்சீட்டுகள் ஆகியவை அடங்கியிருந்தன.
இந்நிலையில், கடற்கரைப் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படை உதவி ஆய்வாளர் கே. அழகேசன் மற்றும் உயிர்காக்கும் பணியாளர் (லைஃப் கார்டு) சாந்தகுமார் ஆகியோர் கடற்கரையில் கேட்பாரற்றுக் கிடந்த பையை கண்டெடுத்தனர். தொடர்ந்து அப்பையைத் திறந்து பார்த்தபோது, அதில் செல்போன் மற்றும் ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட அவர்கள், உரிய சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொண்டு வரவழைத்து, அவர்கள் தவறவிட்ட செல்போன், பணம் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் அனைத்தையும் எந்தவித சேதமுமின்றி பத்திரமாக ஒப்படைத்தனர்.
தங்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் உடைமைகள் பாதுகாப்பாகக் கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், புதுவை காவல்துறையினரின் நேர்மை மற்றும் உடனடி செயல்பாட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளை மீட்டுத் தந்த உதவி ஆய்வாளர் கே. அழகேசன் மற்றும் உயிர்காக்கும் காவலர் சாந்தகுமார் ஆகியோரின் கடமை உணர்வைப் பாராட்டி, புதுச்சேரி கடலோரக் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். தியாகராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
English summary: At the beach near the Secretariat in Puducherry, Coastal Police Sub-Inspector K. Azhagesan and lifeguard Santhakumar found a bag left behind by tourists from Bengaluru and returned it intact. It held a mobile phone worth about Rs 50,000, Rs 5,000 in cash and train tickets. The tourists thanked the Puducherry police, and Coastal Police Station Inspector S. Thiyagarajan gave the two a certificate of appreciation.
