தமிழ்நாடு

அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு எதிரொலி: பதவிக்காக ரூ.5 கோடி பேரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் மனு!

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசு விழாவில் பேசிய தகவலின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை எழும்பூரில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ அரசு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனக்கும் முதலமைச்சருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையின் போது, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத் தலைவர் பதவியை தனக்கு பெற்றுத் தர வேண்டும் என்று கோரி, அதற்காக ரூ. 5 கோடி தருவதாகக் கூறிய ஒரு நபரை, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தன்னிடம் நேரில் அழைத்து வந்ததாக அமைச்சர் மேடையிலேயே பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அரசு உயர் பதவிக்காக பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சரே மேடையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அரசுப் பதவிகளைப் பெறுவதற்கு இத்தகைய பேரம் பேசப்பட்டதும், அதை அரசு சார்ந்த உயர் பொறுப்பில் உள்ளவரே முன்னெடுத்துச் சென்றதும் ஊழல் தடுப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது என்ற கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மேடையில் பேசிய வீடியோ பதிவுகள் மற்றும் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமன், இன்று (02.11.2026) தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து விரிவான புகார் மனுவை அளித்தார்.

அந்தப் புகார் மனுவில், அதிகாரப் பதவிகளைப் பெறுவதற்காக ரூ. 5 கோடி லஞ்சம் தர முன்வந்த நபர் யார் என்பது குறித்தும், அவருக்குத் துணைபோகும் வகையில் செயல்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீவிரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன