புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு ரூ.2,000 வங்கி கணக்கில் வரவு: பெறாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி, 06-11-2026:
புதுச்சேரி தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகையாக தலா ரூ.2,000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை அதிகாரி க. பிரதீப்குமார் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தில் கடந்த 31-03-2026 வரை முறையாகப் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான தீபாவளி பரிசுத் தொகை ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) 06-11-2026 அன்று சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் இதுவரை தீபாவளி பரிசுத் தொகை கிடைக்கப் பெறாத உறுப்பினர்கள், வரும் 30-11-2026-க்குள் தங்களின் உறுப்பினர் அடையாள அட்டை, 2026-ஆம் ஆண்டிற்கான சந்தா செலுத்திய ரசீது, தற்போதைய பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகம் (IFSC குறியீட்டுடன்) மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் தொடர்புடைய வாரிய அலுவலகத்தை நேரில் அணுகி விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ‘தொழிலாளர் அதிகாரி, புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியம், எண் 1, சுப்பரேன் வீதி, புதுச்சேரி’ என்ற முகவரியிலும்; காரைக்கால் மாவட்டத்தினர் ‘தொழிலாளர் அதிகாரி, புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியம், தொழிலாளர் துறை, காமராஜர் வளாகம், மதகடி, காரைக்கால்’ என்ற முகவரியிலும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 30-11-2026 காலக்கெடுவுக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் தீபாவளி பரிசுத் தொகை வழங்கப்படாது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அதில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
