புதுச்சேரியில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடக்கம்: 26 ஆயிரம் வர்த்தகர்களுக்கு பெரும் நிம்மதி!
புதுச்சேரி, 31/10/2026:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோரின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (GST Appellate Tribunal) புதுச்சேரி சர்க்யூட் பெஞ்ச் முறைப்படி தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் வரி மேல்முறையீட்டு வழக்குகளுக்காக வெளிமாநிலங்களுக்கு அலைய வேண்டிய சிரமம் முடிவுக்கு வந்துள்ளதால், சுமார் 26 ஆயிரம் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி பகுதியில் மத்திய ஜி.எஸ்.டி. அமைப்பின் கீழ் 11 ஆயிரம் வர்த்தகர்களும், மாநில ஜி.எஸ்.டி. பிரிவின் கீழ் 15 ஆயிரம் வர்த்தகர்களும் என மொத்தம் 26 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். முறையான வரிக் கணக்குகளை உரிய காலத்தில் தாக்கல் செய்யாதது, வரி கணக்கீட்டுப் பிழைகள் மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு சோதனைகளின்போது வணிகர்களுக்கு அபராதங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுவது வழக்கம். இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து முதற்கட்டமாக ஜி.எஸ்.டி. முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையிடலாம்.
இருப்பினும், அங்கு வழங்கப்படும் உத்தரவுகளில் திருப்தி அடையாத வர்த்தகர்கள் அடுத்தகட்டமாக ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும். இதுவரை புதுச்சேரியில் இதற்கான தனி அமர்வு இல்லாததால், வழக்கு ஆவணங்களுடன் சென்னை உள்ளிட்ட அண்டை நகரங்களுக்கு நேரில் சென்று வர வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் கால விரயமும், கூடுதல் பணச் செலவும் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்த உள்ளூர் வர்த்தகர்கள், புதுச்சேரியிலேயே நிரந்தர தீர்ப்பாய பெஞ்ச் அமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஓம் சக்தி என்.எஸ்.சி. போஸ் அரங்கில் ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் புதுச்சேரி சர்க்யூட் பெஞ்ச் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. புதுடெல்லியில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் தலைவர் சஞ்சய குமார் மிஸ்ரா காணொலி காட்சி வாயிலாக இந்த புதிய அமர்வை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், புதுச்சேரி மத்திய ஜி.எஸ்.டி. ஆணையர் மிலிந்த் லஞ்சேவார், அரசுச் செயலாளர் அனூப் தாகூர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடக்க விழாவைத் தொடர்ந்து, புதுச்சேரி சர்க்யூட் பெஞ்சின் முதல் வழக்கு விசாரணையும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. புதிய நடைமுறைகளின்படி, இனி ஒவ்வொரு மாதமும் 4-வது மற்றும் 5-வது வெள்ளிக்கிழமைகளில் புதுச்சேரி அமர்வில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளில் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர் பிரவீன் குமார் ஜெயின் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் ஷேக் காதர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய அமர்வு பங்கேற்று வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும்.
இந்த தீர்ப்பாய அமர்வு செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் மூலம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வரி செலுத்துவோர் தங்களின் வழக்குகளுக்கு விரைவான தீர்வு காண முடியும் என்றும், தொழில் செய்வதற்கான சூழல் மேலும் எளிதாகும் என்றும் வணிகர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
English summary: The Puducherry circuit bench of the GST Appellate Tribunal has begun functioning, ending the need for traders to travel to cities such as Chennai for second appeals, according to the report. About 26,000 registered traders, 11,000 under central GST and 15,000 under state GST, are covered. Tribunal principal bench president Sanjaya Kumar Mishra inaugurated it by video link at the Om Sakthi NSC Bose hall, and the bench will hear cases on the 4th and 5th Fridays of each month.
