புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்; 2 மணி நேரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு!

புதுச்சேரி, அக். 08: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்பட்டு, அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான முக்கிய அரசியல் களமாகப் பார்க்கப்படும் இத்தொகுதியின் முடிவு புதுச்சேரி அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், தி.மு.க. சார்பில் சேதுசெல்வம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,756 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் 87.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் வாக்குகள் சரிந்துள்ளது அரசியல் கட்சிகளிடையே கடுமையான எதிர்பார்ப்பையும், அதே வேளையில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலப்பரீட்சையாகவும், எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும் களமாகவும் கருதப்படுகிறது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நாளை (அக். 9) காலை 8:00 மணிக்கு மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. தொடக்கமாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மொத்தம் நான்கு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. முதல் மூன்று சுற்றுகளில் தலா 8 வாக்குச்சாவடிகள் வீதம் 24 சாவடிகளும், நான்காவது சுற்றில் எஞ்சிய 7 வாக்குச்சாவடிகளும் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரே மணி நேரத்தில், அதாவது காலை 9:00 மணிக்கே முன்னணி நிலவரம் தெளிவாகத் தெரியவரும். அதைத் தொடர்ந்து சுற்றுகள் வேகமாக எண்ணப்பட்டு, காலை 10:00 மணிக்குள் தட்டாஞ்சாவடி தொகுதியின் வெற்றி மகுடத்தைச் சூடப்போகும் வேட்பாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சியினரும் புதுச்சேரி பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன