நெட்டப்பாக்கம் தொகுதியில் சமுதாய நலக்கூடப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர்கள் உத்தரவு

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மணமேடு மற்றும் நத்தமேடு கிராமங்களில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடங்களின் கட்டுமானப் பணிகளை துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர்கள் பெ. ராஜவேலு மற்றும் ஜி.என்.எஸ். ராஜசேகர் ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி வட்டார வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நெட்டப்பாக்கம் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்த சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பெ. ராஜவேலு மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகர் ஆகியோர் பங்கேற்று, துறைச் செயலாளர், இயக்குநர் மற்றும் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மணமேடு மற்றும் நத்தமேடு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது இல்லத் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் போதிய இடவசதி இல்லாமல் நீண்ட தூரம் பயணித்து நகரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், அவ்விரு கிராமங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இப்பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், கிராமப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எவ்வித தொய்வுமின்றி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், கட்டுமானத் தரத்தில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
English summary: Ministers P. Rajavelu and G.N.S. Rajasekar have ordered officials to finish the community halls being built at Manamedu and Nathamedu villages in the Nettapakkam constituency without delay. At a review meeting at the Puducherry Block Development office, they said construction quality must not be compromised and the halls must be handed over to the public within the deadline.
