மணப்பட்டு கிராமத்தில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக பொதுமக்கள் புகார்
புதுச்சேரி, அக்டோபர் 20: பாகூர் தொகுதிக்கு உட்பட்ட மணப்பட்டு கிராமத்தில் அரசு பம்ப் ஹவுஸ் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மணப்பட்டு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அருகே உள்ள ஆழ்துளை கிணறு மூலமாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் குடிநீர் விநியோகம் தொடங்கும்போது மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதாகவும், சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகே தண்ணீர் தெளிவாக மாறுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்துவதற்கு அச்சப்படுவதாகவும், அதன் தரம் குறித்து கவலைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குடிநீரின் தரம் முறையாக பரிசோதிக்கப்படாவிட்டால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குடிநீரின் தரத்தை பரிசோதித்து, பாதுகாப்பான குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மணப்பட்டு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary: Residents of Manappattu village in the Bahour constituency of Puducherry complained on October 20 that drinking water supplied through a government pump house comes out yellow. Water is supplied three times a day from a borewell near the sub-health centre, and residents said it turns clear only after about half an hour. They said they are afraid to use it and worried about its quality, and urged officials to inspect and test the water and ensure a safe, uninterrupted supply.
