தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு சௌமியா அன்புமணி நேரில் நன்றி

சென்னை: தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தருமபுரி மாவட்டத்தில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. சட்டப்பேரவை மற்றும் மக்கள் மன்றங்களில் இது தொடர்பாக தொடர்ந்து பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாமகவின் தொடர் முயற்சியின் பயனாக தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக மக்கள் நல்வாழ்வு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கல்லூரி அமைவதன் மூலம் அப்பகுதி மாணவ, மாணவிகளின் மருத்துவக் கல்வி கனவு நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.