தமிழ்நாடு

தேனி மாவட்ட சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோட்டம்

தேனி, அக்டோபர் 27: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்புசாமி, சிலம்பரசன், திருப்பதி, பிரவீண் உள்ளிட்ட 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேற்றிரவு கைதி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டதை அடுத்து, நான்கு சிறை காவலர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது காவலர்கள் நான்கு பேரையும் தாக்கிய கைதிகள், சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பியோடினர். கைதிகள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை காவலர் தங்கப்பாண்டி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தேக்கம்பட்டி சிறைக்குச் சென்ற தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நேரில் விசாரணை நடத்தினார். சிறைக் கதவுகள் திறக்கப்பட்ட விதம் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களின் விவரங்கள் குறித்து அவர் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் பணி மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே சிறைக்குப் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பிரவீண் மற்றும் வனப்பகுதியில் பதுங்கியிருந்த சிலம்பரசன் ஆகிய இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மற்ற கைதிகளைப் பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேனி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன