தமிழ்நாடு

புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு 500 தமிழக மின்வாரிய ஊழியர்கள் விரைவு: முதலமைச்சர் உத்தரவுப்படி அனுப்பி வைப்பு!

சென்னை: ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் வீசிய புயல் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மின் கட்டமைப்புகள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. அங்கு மின் விநியோகத்தை விரைந்து மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 500 பணியாளர்கள் கொண்ட மின்சீரமைப்புக் குழுக்கள் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, ஆந்திர மாநிலத்திற்குப் புறப்பட்ட இந்த சிறப்பு மின்சீரமைப்புக் குழுக்களின் பயணக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இயற்கை பேரிடர் காலங்களில் அண்டை மாநிலங்களுக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்குழுவில் அனுபவம் வாய்ந்த களப் பொறியாளர்கள், மின் கம்பியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். புயலால் முறிந்து விழுந்த மின் கம்பங்களை அகற்றுதல், புதிய மின் கம்பங்களை நடுதல், அறுந்து விழுந்த மின்கடத்தி கம்பிகளைச் சீரமைத்தல் மற்றும் துணை மின் நிலையங்களின் செயல்பாட்டை மீட்டெடுத்தல் உள்ளிட்ட அவசரகால சீரமைப்புப் பணிகளில் இவர்கள் களமிறங்க உள்ளனர்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மின்சார வாரியத் தலைவர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., மற்றும் மின் பகிர்மானக் கழக இணை மேலாண்மை இயக்குநர் திரு. சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், மின் பகிர்மானக் கழக இயக்குநர் திருமதி எல். லீனா உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு, மீட்புப் பணிகளுக்குப் புறப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு உபகரணங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன