புதுச்சேரி

புதுச்சேரி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: புள்ளிவிவர ஆய்வாளர், வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கான பட்டியல் அறிவிப்பு!

புதுச்சேரி, நவம்பர் 5: புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கான (Combined Graduate Level Exam) தற்காலிக தேர்வுப் பட்டியலை புதுச்சேரி தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி புள்ளிவிவர ஆய்வாளர் (Statistical Inspector), வேளாண் அலுவலர் (Agricultural Officer), வேளாண் அலுவலர்-பொறியியல் (Agricultural Officer – Engineering) மற்றும் வேளாண் அலுவலர்-ஹைட்ரோஜியாலஜி (Agricultural Officer – Hydrogeology) ஆகிய முக்கியப் பணியிடங்களுக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி தலைமைச் செயலகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 21 முதல் 23 வரை எழுத்துத் தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, அதற்கான உத்தேசத் தேர்வுப் பட்டியல் ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் செப்டம்பர் 21 முதல் 25 வரை நிறைவுபெற்றன.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் அவர்கள் அளித்த முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படி தற்காலிக தேர்வுப் பட்டியல் நான்கு இணைப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எண் W.P. No.38096/2026 இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டு, வேளாண் அலுவலர் பிரிவில் பட்டியலினத்தவருக்கான (SC) ஒரு பணியிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தற்காலிக தேர்வுப் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பது மட்டுமே பணி நியமனத்திற்கான முழு உரிமையையும் தந்துவிடாது என்றும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த விசாரணை மற்றும் சரிபார்ப்புகளை மேற்கொண்ட பிறகே இறுதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் தேர்வு ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

https://recruitment.py.gov.in/

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன