தமிழ்நாடு

கடலூரில் தவறவிட்ட பணம், வெள்ளிக் கொலுசுகளை மீட்ட போக்குவரத்து காவலர்: உரியவரிடம் ஒப்படைத்து பாராட்டு!

கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர், சாலையில் தவறவிடப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி கொலுசுகள் அடங்கிய பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து தனது நேர்மையை வெளிப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் தனது அத்தியாவசிய பணிகளுக்காக வெளியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாகத் தனது கைப்பையை (பர்ஸ்) தவறவிட்டுள்ளார். அந்தப் பையினுள் இரண்டு வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.6,000 ரொக்கப் பணம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. பையைத் தவறவிட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அவர், அதனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் மிகுந்த கவலையடைந்தார்.

இந்த நிலையில், திருப்பாதிரிப்புலியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வரும் திரு. பிரபாகரன் (HC 2024), அப்பகுதியில் வழக்கமான போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையை கண்டெடுத்துப் பார்த்தபோது, அதில் இரண்டு வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.6,000 ரொக்கம் பத்திரமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேர்மையுடன் செயல்பட்ட தலைமை காவலர் பிரபாகரன், உரிய விசாரணையை மேற்கொண்டு அந்தப் பை பிரியா என்பவருக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்தார். தொடர்ந்து அவரை நேரில் வரவழைத்து, உரிய விசாரணைகளுக்குப் பின்னர் பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளை அவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

நேர்மையும் கடமையும் காவல்துறையின் உண்மையான அடையாளம் என்பதை உணர்த்தும் வகையில் துரிதமாகச் செயல்பட்டு உடமைகளை மீட்டுக் கொடுத்த தலைமை காவலர் பிரபாகரனை, காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர். தனது உடமைகள் முழுமையாகக் கிடைத்த மகிழ்ச்சியில் உரிமையாளர் பிரியா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன