ஆரோக்கியமான பாரதமே ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ இலக்கின் அடித்தளம்: ஸ்ரீநகரில் ஜே.பி.நட்டா திட்டவட்டம்!

ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற தொலைநோக்குப் பார்வை நனவாக ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதே முதன்மையான அடித்தளம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஆர்ஷ் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு (ARSH Institute of Health Sciences and Technology) நேரில் வருகை தந்த அவர், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் எதிர்கால சுகாதாரப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் ‘விக்சித் பாரத்’ இலக்கை நிர்ணயித்துள்ளார் என்றும், ஆரோக்கியமான பாரதத்தை கட்டமைப்பதன் மூலமே இந்த இலக்கை முழுமையாக எட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும் ஸ்ரீநகர் பகுதி இளைஞர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், இளைஞர்களுக்கு தரமான மருத்துவத் திறன்களை வழங்கி வரும் ஆர்ஷ் கல்வி நிறுவனத்தின் சிறந்த முயற்சிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


