கோவை பெரியார் அறிவுலகம் நூலக புத்தக கொள்முதலில் முறைகேடு: முழு விசாரணை கோரி அண்ணாமலை காட்டம்!

சென்னை: கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆவணங்களுடன் கூடிய முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல; மாறாக வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியற்ற ஏழை எளிய மாணவர்களுக்கும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் சமமான வாய்ப்புகளையும் அறிவையும் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து என்று குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது நிதி முறைகேடு மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம் எனச் சாடியுள்ளார்.
மேலும், புத்தகப் பரிந்துரைக் குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்துப் புத்தகங்களும் உண்மையில் முறையாகக் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ஐஎஸ்பிஎன் (ISBN) எண்கள், கொள்முதல் தேதி மற்றும் நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறைகள் என்னென்ன? ஆகிய கேள்விகளுக்கு அரசு ஆவணப்பூர்வமான பதில்களை அளிக்க வேண்டும் என அண்ணாமலை சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தையும் உடனடியாகப் பொதுவெளியில் அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்திற்கு முழுமையாகச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருப்பது மக்கள் வரிப்பணக் கொள்ளை மட்டுமல்ல, மிகப்பெரிய அறிவுக் கொள்ளை என்றும், இதில் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

