அரவக்குறிச்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட கிளை நூலகம்: ஜோதிமணி எம்.பி. திறந்து வைத்தார்!

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் ரூ.140 லட்சம் (ரூ.1.40 கோடி) மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கிளை நூலகத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று திறந்து வைத்தார்.
அரவக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இக்கோரிக்கையினை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் தீவிர முயற்சியால் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மூலம் இந்த புதிய நூலகக் கட்டிடம் கட்டப்பட்டு தற்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ரூ.140 லட்சம் மதிப்பீட்டில் நவீன உள்கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மாவட்ட கிளை நூலகத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் பொது அறிவு இதழ்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையான குறிப்புதவி புத்தகங்கள் மற்றும் அமைதியான முறையில் வாசிப்பதற்கான பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்டு கல்வெட்டைத் திறந்து வைத்து, நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் இந்த நூலகம் பெரும் பாலமாக அமையும் என்றும், இளைய சமுதாயத்தினர் இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நூலகத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
