புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மை வரைவு திட்டம்: டிசம்பர் 7-ல் கம்பன் கலையரங்கில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
புதுச்சேரி: மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்ட 2019-ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிக்கையின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தை (CZMP) புதுச்சேரி அரசு தயாரித்துள்ளது. இத்திட்டத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பகுதிகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டு, அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டு முறைப்படுத்தப்பட உள்ளன.
இந்த வரைவு திட்டத்தை இறுதி செய்யும் நடைமுறையின் முக்கியப் பகுதியாக, பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மீனவ சமூகத்தினரின் ஆலோசனைகள், பரிந்துரைகளைப் பெற மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டம் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி அன்று காலை 10:00 மணிக்கு புதுச்சேரி புஸ்சி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பார்வைக்காக வரைவு திட்டத்தின் பிரதிகள் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம் மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள், புதுச்சேரி நகர அமைப்பு குழுமம் மற்றும் கடற்கரை மேலாண்மை அதிகார அமைப்பு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், https://dste.py.gov.in/ppcc/CZMP-pdy-2026.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வரைபடங்களை பார்வையிடலாம்.
இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அண்ணா நகரில் உள்ள புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் N. ரமேஷ் அவர்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

