கோவை பெரியார் அறிவுலக நூலக புத்தக விவகாரம்: முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுக்கு திமுக காரசார பதிலடி!
சென்னை: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரையில் குறிப்பிட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக முதலமைச்சர் விஜய் திமுக மீது சரமாரி ஊழல் புகார்களை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு திமுக தலைமை விரிவான விளக்கமளித்து காரசாரமான பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக இது தொடர்பாகப் பதிவிட்டிருந்த முதல்வர் விஜய், “கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக், நகராட்சி நிர்வாகம், அரசு டெண்டர்கள் என அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருந்தது போல், அறிவுலக நூலகத்தையும் ஊழல் உலகமாக மாற்றிவிட்டனர்” என்று கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
முதல்வரின் இந்த விமர்சனத்திற்கு மறுப்பு தெரிவித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்யப்பட்டது என்றும், அதனைத் துறை சார்ந்த பதிப்பாளர்களே நன்கு அறிவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் கவனம் செலுத்தாத அரசு, தங்கள் மீதான விமர்சனங்களைத் திசைதிருப்பவே இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக, பெரியார் அறிவுலகத்தில் திமுக ஆட்சியில் பெறப்பட்ட புகழ்பெற்ற பதிப்பக நூல்கள் மார்ச் மாத முத்திரையோடு உள்ளதாகவும், ஆனால் போலியானதாகக் கூறப்படும் குறிப்பிட்ட நூல்களில் மட்டும் தற்போதைய முதல்வரின் பிறந்தநாளான ஜூன் மாத முத்திரை இடப்பட்டிருப்பதாகவும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் தவெக ஆட்சியில் போலி புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன, அதற்கு யார் முடிவு எடுத்தது என்ற அடுக்கடுக்கான கேள்விகளையும் திமுக எழுப்பியுள்ளது.
ஏற்கனவே கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதலில் வெளிப்படையான முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஆளும் தரப்பிற்கும் திமுகவிற்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


