நாராயணசாமியின் செயல்பாடுகளால் புதுவையில் காங்கிரசே இல்லாத நிலை ஏற்படும்: அமைச்சர் நமச்சிவாயம் கடும் தாக்கு!
புதுச்சேரி, நவ. 06:
புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி அடியோடு காணாமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கடுமையாகச் சாடியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வந்துள்ளது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக மீதும் பிரதமர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்றும், தோல்வியடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையம் மீது பழி சுமத்துவதையும் காங்கிரஸ் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி என்பது வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நீக்குவதற்கான வழக்கமான நடைமுறையே தவிர, வாக்குகளைத் திருடுவதற்காக அல்ல” என்று விளக்கமளித்தார்.
புதுச்சேரியின் நிர்வாகப் பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், “புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. குற்றச்செயல்களை ஒடுக்க காவல்துறைக்குத் தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நகரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மின் துறையில் 40 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டமைப்புகளை நவீனப்படுத்த மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.134 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி தற்போது மின் மிகை மாநிலமாகத் திகழ்கிறது; பிரதமரின் சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் 113 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமியை விமர்சித்த அமைச்சர், “மக்களாலும் தனது சொந்தக் கட்சியாலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவர் நாராயணசாமி. அரசியலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவே அவர் நாள்தோறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால்தான் 2021 தேர்தலில் 2-ஆகக் குறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, பின்னர் 1-ஆகச் சரிந்தது. இந்நிலை நீடித்தால் புதுவையில் காங்கிரசே இல்லாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள். முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.டி.ஏ. அரசு மக்களின் நன்மதிப்பைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.
