தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி வரை கனமழை தொடரும்: சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை, நவம்பர் 7: தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் உருவான புயல்கள் காரணமாக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழையினால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மிதமான மழையும், ஊத்துக்கோட்டையில் கொட்டித் தீர்த்த மழையால் அரசுப் பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்கியது. விழுப்புரம் மற்றும் பெண்ணாடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 62 அடி உயர செண்பகத்தோப்பு அணை வேகமாக நிரம்பி வருவதால் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதியிலிருந்து உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்றும், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவளி அன்றும் அதற்கு அடுத்த நாளும் கனமழை பெயியும் என்றும், வரும் 10ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.