புதுச்சேரி வில்லியனூரில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் அதிரடி கைது: பைக், ரொக்கம் பறிமுதல்!
புதுச்சேரி, அக். 05:
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரொக்கப் பணம், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாமியார்தோப்பு பள்ளிவாசல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குறிப்பிட்ட வீட்டை நாலாபுறமும் சுற்றி வளைத்தனர். பின்னர் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த நபர்களை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வில்லியனூரைச் சேர்ந்த ரமேஷ் (எ) சிங்கார ரமேஷ் (43), ஐயப்பன் (28), பூரசன் (28), கார்த்திகேயன் (27), அன்பரசன் (28), விஜய் (29), கணுவாப்பேட்டையைச் சேர்ந்த சந்துரு (25), வில்லியனூரைச் சேர்ந்த விஜய் (28) மற்றும் விமல் (21) என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து 9 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம், 9 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


