தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவித்த சம்பள உயர்வு எங்கே? முதலமைச்சர் ரங்கசாமிக்கு திமுக அமைப்பாளர் இரா.சிவா கேள்வி!

புதுச்சேரி:
புதுச்சேரியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், பல பகுதிகளில் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிவரும் பங்கு அளப்பரியது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய சம்பள உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்கள் ஆகியும் பெரும்பாலான கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளாட்சித் துறையின் கீழ் தூய்மைப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு முறையாகவும் உரிய நேரத்திலும் செய்யப்படாமல் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக அடித்தட்டு உழைப்பாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு மாதாந்திர வழக்கமான சம்பளம் கிடைப்பதிலும், பண்டிகைக் கால தீபாவளி போனஸ் உள்ளிட்ட சட்டப்பூர்வ சலுகைகள் கிடைப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
எனவே, புதுச்சேரி அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் என்.ரங்கசாமி தனி கவனம் செலுத்தி, நிலுவையில் உள்ள நிதி ஒதுக்கீட்டை விரைந்து விடுவித்து, அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு மற்றும் போனஸ் தொகையைத் தூய்மைப் பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.