முள்ளோடை வரை மேம்பாலச் சாலையை நீட்டிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம்!
புதுச்சேரி, அக். 8:
புதுச்சேரி – கடலூர் சாலையில் முன்மொழியப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டத்தை முள்ளோடை எல்லை வரை முழுமையாக நீட்டிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் கடலூர் இடையேயான சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், புதுச்சேரியிலிருந்து முள்ளோடை சந்திப்பு வரை ரூ.650 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆரம்பக்கட்ட வரைவுத் திட்டத்தில், 2.6 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலச் சாலையும், எஞ்சிய 13.3 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையை விரிவாக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் ரங்கசாமி எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரி – கடலூர் தடத்தில் வாகனங்கள் தடையின்றி விரைவாகச் சென்று வர ஏதுவாக, மேம்பாலச் சாலையை முள்ளோடை எல்லை சந்திப்பு வரை முழுமையாக நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்திட்டத்தை எல்லை வரை நீட்டித்துச் செயல்படுத்த கூடுதலாக சுமார் ரூ.1,500 கோடி நிதி தேவைப்படும் என்றும் அவர் தனது கடிதத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய சிந்தன் சிவிர் கருத்தரங்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பங்கேற்றார். அப்போது, இத்திட்ட விரிவாக்கம் தொடர்பான முதல்வர் ரங்கசாமியின் கடிதத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அவர் நேரில் வழங்கி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், கடலூர் சாலை வழித்தடத்தில் அமையவுள்ள இப்புதிய சாலைத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிப்பதற்குத் தகுதியான ஆலோசகரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் அக்கோரிக்கையில் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே வேளையில், புதுச்சேரி நகரின் முக்கியப் பகுதிகளான இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் ஆகியவற்றை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்திற்கு ரூ.436 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ரூ.79.40 கோடி மதிப்பிலான 3 வளர்ச்சிப் பணிகளுக்கும், மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் (CRIF) கீழ் ரூ.61.96 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்தமைக்காகவும் ஒன்றிய அமைச்சருக்கு புதுச்சேரி அரசு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


