தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
புதுச்சேரி, அக்டோபர் 25: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியம் சூ.கீனனூர் கிராமத்தில் என்எல்சி சுரங்க வாய்க்கால் மூலம் வெளியேறிய மழைநீர் புகுந்ததால் 5,000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த புலிக்கரையில் விளைநிலத்தில் மழைநீர் புகுந்ததால் மிளகாய், மஞ்சள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் பெய்த கனமழையால் கருங்கரடு, செக்கனூர், நாட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கியதால் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன. புதுச்சேரியில் சோரப்பட்டு, மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், விளியிட்டூர் பகுதிகளில் 2,000 ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பயிர் சேதத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



