புதுச்சேரி

புதுச்சேரியில் வீடுகளுக்கே குழாய் மூலம் சமையல் எரிவாயு: இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்!

புதுச்சேரி, அக். 25: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நீண்ட நாட்களாகப் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வீடுகளுக்கான குழாய் வழி சமையல் எரிவாயு (PNG) விநியோகத் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தை ஈஸ்ட் கோஸ்ட் நேச்சுரல் கியாஸ் டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் நிலையில், இதற்கான எரிவாயுவை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்க உள்ளது.

முதற்கட்டமாக சோரப்பட்டு முதல் மேட்டுப்பாளையம் வரையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவிற்குப் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, நகரின் மையப் பகுதிகளான புஸ்ஸி வீதி, திருவள்ளுவர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கிளைக் குழாய்கள் பதிப்பதற்குத் தகுந்த அனுமதிகள் பெறப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க புல்வர்டு பகுதிகளில் குழாய் பதிக்க பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் கூடுதலாக 14 கிலோமீட்டர் தூரத்திற்குக் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டுள்ள சூழலில், அடுத்தகட்டமாக வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு எரிவாயு இணைப்பு விரிவுபடுத்தப்படுகிறது. நிர்வாக அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட சிறிய தாமதம் காரணமாக, வீடுகளுக்கு நேரடி விநியோகம் வழங்கும் பணி இந்த ஆண்டின் இறுதிக்குள் முறைப்படி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், புதுவை அரசு வீட்டு உபயோக எரிவாயு மீதான வரியை 14.5 சதவீதத்திலிருந்து அதிரடியாக 1 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டருக்கு இணையான எரிவாயு வெறும் ரூ.550 முதல் ரூ.600 என்ற மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் பதிவு செய்து காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி, 24 மணி நேரமும் தடையின்றி இந்த எரிவாயுவை பெறலாம். அதேவேளையில், மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி வீடுகளில் குழாய் எரிவாயு இணைப்பு பெறுபவர்கள் வழக்கமான கேஸ் சிலிண்டர் இணைப்பை வைத்திருக்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன