தமிழ்நாடு

நீலகிரி மண்சரிவு: நடுங்கும் குளிரில் சிக்கிய 78 மாணவிகள் மீட்பு – அரசுப் பேருந்து டிரைவர் பலி!

ஊட்டி, அக். 25:
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பயங்கர மண்சரிவு ஏற்பட்டது. இதில் அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மீது பாறைகளும் சகதியும் சரிந்து விழுந்ததில், பேருந்துக்குள் சிக்கிய ஓட்டுநர் ஜனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நடத்துநர் கேசவன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சுற்றுலாவை முடித்துக்கொண்டு கேரளா மாநிலம் கோட்டயம் பகுதிக்கு 4 பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்த மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 78 பேர் மற்றும் 8 ஆசிரியைகள், கல்லாறு சோதனைச் சாவடி அருகே மரங்கள் முறிந்து விழுந்ததால் உறைபனி குளிரில் நடுவழியில் சிக்கிக்கொண்டனர். செல்ல வழியின்றி தவித்த அவர்கள், கூகுள் மேப் லொகேஷன் பகிர்ந்தும் வாட்ஸ்அப் வழியாகவும் தகவல் தெரிவித்தனர். இறுதியாக அவசரக் காவல் எண் 100-க்கு தொடர்பு கொண்டதை அடுத்து அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேற்கு மண்டல காவல் ஐ.ஜி. ரம்யா பாரதி, எஸ்பி பவன்குமார் ரெட்டி ஆகியோரின் உத்தரவின்பேரில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாணவிகளை மீட்கச் சென்றபோதுதான், வழியில் அரசுப் பேருந்து ஒன்று மண் மற்றும் சகதிக்குள் புதைந்து கிடந்தது தெரியவந்தது. பேருந்துக்குள் இருந்து வந்த நடத்துநரின் கூக்குரலைக் கேட்ட மீட்புக் குழுவினர், அவரைப் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து கடும் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த 78 மாணவிகளையும் ஆசிரியைகளையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

இதே விபத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த கோழி இறைச்சி லாரியின் ஓட்டுநர் மோசீன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பர்லியார் பகுதியில் தொடரும் மண்சரிவுகளால் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, நெடுஞ்சாலைத் துறை போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன