புதுச்சேரி

முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்: போலி முகவரி பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலம்!

புதுச்சேரி, அக். 24: புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான கல்யாணசுந்தரத்திற்கு தபால் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் போலி முகவரியைப் பயன்படுத்தியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி கருவடிக்குப்பம் மகாவீர் நகர் 4-வது மெயின் ரோட்டில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் கல்யாணசுந்தரம் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதியன்று இவரது வீட்டு முகவரிக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து விரைவு தபால் (Speed Post) மூலமாக ஒரு கடிதம் வந்தது. அதில் கல்யாணசுந்தரத்திற்கு கடுமையான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் உடனடியாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தரக்குறைவாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லாஸ்பேட்டை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மிரட்டல் கடிதத்தில் அனுப்பியவர் முகவரியாக சாரம் சக்தி நகரைச் சேர்ந்த ‘கதிர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தபாலில் குறிப்பிடப்பட்டிருந்த சக்தி நகர் முகவரிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அந்த குறிப்பிட்ட முகவரியில் கதிர் என்பவர் வசிக்கவில்லை என்பதும், வேறொரு குடும்பத்தினர் அங்கு வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியில் நான்கு தெருக்கள் தள்ளி கதிர் என்ற பெயருடைய நபர் ஒருவர் வசித்து வருவது கண்டறியப்பட்டது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதில், அவருக்கும் இந்த மிரட்டல் கடிதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. இதன் மூலம் மிரட்டல் விடுத்த நபர் திட்டமிட்டு போலியான முகவரியைப் பயன்படுத்தி கடிதம் அனுப்பியது அம்பலமானது.

முன்னாள் அமைச்சருக்கு போலி முகவரியைப் பயன்படுத்தி தபாலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய உண்மையான மர்ம ஆசாமி யார் என்பது குறித்து லாஸ்பேட்டை போலீசார் தபால் நிலைய சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன